Archives: மே 2017

நொறுங்குண்ட நிலையின் அழகு!

கின்ட்சூகி (Kintsugi) என்பது உடைந்த மண்பாண்டங்களை சீரமைக்கும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஒரு ஜப்பானிய கலை ஆகும். குங்கிலியம் (Resin) என்னும் ஒரு பிசின் வகையோடு பொன்துகள்களை கலந்து, உடைந்த துண்டுகளை அக்கலவையைக்கொண்டு ஒட்டிவிடுவார்கள். விரிசல்களிலும் இதை நிரப்பிடுவார்கள். விளைவு, மிக உறுதியான ஒரு இணைப்பு. உடைந்து போன மண்பாண்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வெறுமனே மறைப்பதற்கு பதில் ஒரு அற்புதமான கலையைக் கொண்டு அதை அழகான பாண்டமாக மாற்றிவிடுவார்கள். 

அதைப்போலவே, நாம் செய்த பாவத்திற்காக உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும் பொழுது, அந்நொறுங்குண்ட நிலையை தேவன் மிக உயர்வாகக் காண்கிறார் என்று வேதம் கூறுகிறது. தாவீது பத்ஷேபாளோடு விபசாரத்தில் ஈடுபட்டதுமன்றி அவளுடைய கணவனைத் திட்டமிட்டு கொலை செய்தான். இதைக்குறித்து தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதை எதிர்கொண்டு விசாரித்த பொழுது, தாவீது மனந்திரும்பினான். “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்,” என்று பின்பு தாவீது செய்த ஜெபத்தின் மூலம், நாம் பாவம் செய்வோமானால் தேவன் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் (சங். 51:16-17). 

பாவத்தினால் நம்முடைய இருதயம் உடைந்து போயிருக்கும்பொழுது, சிலுவையிலே நமது இரட்சகரால் நமக்கு மிக தாராளமாய் அளிக்கப்பட்ட விலையேறப்பெற்ற மன்னிப்பைக் கொண்டு தேவன் நம் இருதயத்தை சீர்ப்படுத்துவார். நாம் அவரிடம் நம்மை தாழ்த்தி அர்ப்பணிக்கும் பொழுது, அன்புடன் நம்மை வரவேற்று கிட்டிச் சேர்த்துக்கொள்வார் 

தேவன் எவ்வளவாய் இரக்கமுள்ளவர்! தாழ்மையுள்ள இருதயத்தையே தேவன் விரும்புவதாலும், அவருடைய இரக்கங்கள் மகாசவுந்தர்யமுள்ளதாய் இருப்பதாலும், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்: என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்,” என்னும் இன்னொரு வேதாகம ஜெபம் இன்று நமதாகட்டும் (சங். 139:23-24).

இரக்கத்தை எதிர்பார்த்திடு இரக்கத்தை அளித்திடு!

என் தோழியின் தவறான தீர்மானங்களும் தேர்வுகளும் அவளை பாவத்திற்குள்ளாக மிக அதிகமாய் அழைத்துச் சென்றது மாத்திரமன்றி அவளுடைய செயல்கள் என்னையும் பாதித்தது. இதைக் குறித்து நான் ஒவ்வொரு வாரமும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும் பெண் ஒருவரிடம் முறையிட்டபொழுது, அவர் தன்னுடைய கரங்களை என் கரங்கள் மீது வைத்து, “சரி நாம் நம் அனைவருக்காகவுமே ஜெபிக்கலாம்” என்று கூறினார். 

அதற்கு நான், “நம் அனைவருக்காகவுமா?” என முகம் சுளித்து வினவினேன். 

“ஆம் எப்பொழுதும் இயேசுவே நம்முடைய பரிசுத்தத்தின் அளவுகோலாய் இருப்பதால், நம்முடைய பாவங்களை நாம் ஒருபோதும் மற்றவருடைய பாவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது என்று நீயே கூறியிருக்கிறாயே?” என அவர் பதிலளித்தார். 

நான் தவறை உணர்ந்து, “இந்த உண்மை எனக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நீங்கள் கூறுவது சரியே. என்னுடைய நியாயந்தீர்க்கும் மனப்பான்மையும் ஆவிக்குரிய பெருமையும் அவளுடைய பாவங்களை விட சாதாரமானதும் இல்லை மோசமானதுமில்லை” எனக் கூறினேன். 

அதற்கு அவர் “மேலும், நாம் உன்னுடைய தோழியை பற்றி பேசுவதின் மூலம் புறங்கூறிக் கொண்டிருக்கிறோம். இதனால்...” என்று கூற… 

“நாம் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்,” என பதிலளித்தேன். தவறை உணர்ந்து, தலையை தாழ்த்தி, “தயவு செய்து நமக்காக ஜெபம் செய்யுங்கள்,” என்றேன். 

தேவலாயத்திற்கு வந்து வெவ்வேறு விதமாக ஜெபித்த இரண்டு நபர்களைக் குறித்து உவமையாக இயேசு கூறியிருப்பதை லூக்கா 18ஆம் அதிகாரத்தில் காணலாம் (வச. 9-14). அந்த பரிசேயனைப் போல நாமும் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வட்டத்திற்குள் மாட்டிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நாம் நம்மை பற்றியே பெருமை பாராட்டிக்கொள்ளவும் கூடும் (வச. 11-12). இந்த மனப்பான்மையினால், மற்றவர்களை நியாயந்தீர்க்க நமக்கு அதிகாரம் உண்டென்றும், அவர்களை சீர்படுத்த நமக்கு வல்லமை உண்டென்றும், அப்பொறுப்பு நம்முடையதே என்றும் நாம் எண்ணி ஜீவிப்போம். 

ஆனால், நாம் இயேசுவின் பரிசுத்த வாழ்வையே மாதிரியாகக் கொண்டு, அவருடைய நன்மைகளை நம் வாழ்வில் கண்டுணரும் பொழுது, நாமும் அந்த ஆயக்காரனைப்போல, தேவகிருபை நமக்கு இன்னும் எவ்வளவு அதிகமாய் தேவை என்பதை அறிந்துகொள்வோம் (வச. 13). தேவனுடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் நம் வாழ்வில் அனுபவிக்கும்பொழுது, நாம் மனமாற்றம் அடைந்து, இரக்கத்தை எதிர்பார்க்வும் அதையே பிறருக்கு அளிக்கவும் வல்லமைபெறுவோம். ஒருபோதும் நாம் பிறரை குற்றவாளியாக தீர்க்கமாட்டோம். 

கனம் கனத்தை சந்திக்கட்டும்

அர்லிங்டன் (Arlington) தேசிய கல்லறையிலுள்ள ‘அறியாதவர்களின் கல்லறையில்’ நடந்தேறும் காவலர் மாற்றம் என்னை எப்போதும் வெகுவாய் கவர்ந்ததுண்டு. மிக மரியாதையுடன் கம்பீரமாக அதே சமயம் எளிமையாகவும் அந்நிகழ்வு நடக்கும். ‘தேவன் மாத்திரமே அறிந்த’ அப்போர்வீரர்களையும் அவர்களுடைய தியாகத்தையும் எண்ணி மிக ஜாக்கிரதையாக வடிவமைத்து இயக்கப்பட்ட இந்நிகழ்வு நெஞ்சை
நெகிழ வைக்கும் அஞ்சலி ஆகும். அது மாத்திரமல்ல மக்கள் கூட்டம் ஏதுமில்லாத போதும், முன்னும் பின்னுமாக சீரான வேகத்தில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் மோசமான வானிலையிலும் அக்காவலர் நடந்துசெல்வது நெஞ்சை நெகிழச் செய்யும். 

2003ஆம் ஆண்டு வாஷிங்டன் மாநகரை இசபெல் (Isabel) சூறாவளி நெருங்கிக் கொண்டிருந்தபொழுது, அது அந்நகரை தாக்கக்கூடிய மிக மோசமான நேரத்தில் அக்காவலர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் கிட்டத்தட்ட அக்காவலர் அனைவரும் அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. சூறாவளி வீசிய போதும் கூட மடிந்துபோன தங்களுடைய தோழர்களை கனப்படுத்தும் பொருட்டு எவ்வித சுயநலமுமின்றி அவரவர் இடத்திலேயே நின்றார்கள். 

தேவனிடத்தில் மனந்தளராத தன்னலமற்ற பக்தியுடன் நாம் வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என்று மத்தேயு 6ஆம் அதிகாரத்தில் உள்ள இயேசுவின் போதனை நமக்கு தெரிவிப்பதாக நான் விசுவாசிக்கிறேன் (வச. 1-6). நற்கிரியைகளுக்கும் பரிசுத்த ஜீவியத்திற்கும் நேராக வேதாகமம் நம்மை அழைக்கிறது. ஆனால் இவை ஆராதனைக்கும் கீழ்ப்படிதலுக்குமுரிய காரியங்களாக இருக்க வேண்டுமே அன்றி (வச. 4-6), நம்முடைய சுய மகிமைக்காக திட்டமிட்டு செயல்படுத்தபட்ட காரியங்களாக இருக்கக்கூடாது (வச. 2). நம்முடைய ஜீவியம் முழுவதும் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய சரீரங்களை “ஜீவ பலியாக” ஒப்புக்கொடுக்கும்படி நம்மை நோக்கி மன்றாடுகிறார் (ரோம. 12:1) 

தேவனே, எங்களுடைய தனிமையான தருணங்களும் தனிமையற்ற தருணங்களும் நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பையும், பக்தியையும் பறைசாற்றுவதாக.

ஒரு அடைக்கலான் குருவியாகிலும்!

தன் வாழ்நாள் முழுவதும் கம்பீரமாகவும் கண்ணியமாகவும் இருந்த என் தாயார், இப்பொழுது முதிர்வயதினால் சிறைப்பட்டு தளர்ந்து பலவீனமடைந்து ஒரு நலவாழ்வு மையத்தின் படுக்கையிலே படுத்திருந்தார். மூச்சுவிடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருந்த பொழுது, அதற்கு நேர் எதிர்மாறாக அவ்வறையின் ஜன்னலுக்கு வெளியே அழகான வசந்தகால நாள் நம்மை இனிதாய் வரவேற்றது. 

உணர்ச்சிமிக்க வழியனுப்புதலின் அப்பட்டமான உண்மை நிலைக்கு ஏற்றாற் போல நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இவ்வுலகத்தில் உள்ள எப்பேர்பட்ட ஆயத்தமும் நம்மை தயார் படுத்த இயலாது. இதை சிந்தித்தபொழுது சாவு என்பது எவ்வளவு வெட்கக்கேடான ஒன்று! என நான் எண்ணினேன்.

அப்பொழுது நான் என் பார்வையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த விதை தட்டில் உள்ள விதையை உண்ணும்படி சிறகடித்தவாறு ஒரு சிறு பறவை அதை உண்டுகொண்டிருந்ததை கண்டேன். அக்காட்சியை கண்ட உடனே “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது”, என்று நான் நன்கு அறிந்த இவ்வசனம் என் மனதிலே தோன்றியது (மத். 10:29). இவ்வார்த்தைகளை இயேசு தம்முடைய சீஷர்கள் யூதேயாவுக்கு சென்று ஊழியம் செய்யும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தபொழுது கூறினார். மேலும், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”, என்றும் அவர்களிடம் கூறினார் (வச. 31). இந்நியமனம் அவர்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் பொருந்தும். 

என் தாய் சற்று அசைந்து தன் கண்களைத் திறந்து பார்த்தார். அப்பொழுது அவர் தன் பால்ய வயதில் மிகுந்த அன்போடு அவரது தாயை கூப்பிடும் ஒரு டச்சு மொழிச் சொற்றொடரை கூறி, “மூயுட்டி இறந்துவிட்டார்!” என தன் தாயை குறித்து தெரிவித்தார். 

“உண்மைதான். அவர் இப்பொழுது இயேசுவுடன் இருக்கிறார்,” என்று என் மனைவி பதிலளித்தாள். அதைக் கேட்ட என் தாயார் நிச்சயமின்றி, “ஜாய்ஸ் மற்றும் ஜிம்?” என்று தன்னுடைய சகோதரியை குறித்தும் சகோதரனை குறித்தும் கேட்டார். அதற்கு என்னுடைய மனைவி, “ஆம், அவர்களும் இயேசுவோடுதான் இருக்கிறார்கள். நாமும் சீக்கிரத்தில் அவர்களோடு இருப்போம்!” என்று பதிலளித்தார். 

“ஆனால், காத்திருப்பது மிகக் கடினமாக உள்ளது,” என அமைதியாக என் தாயார் கூறினார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் ஒளி

நானும் என் கணவரும் எப்போதும் எங்கள் சபையில் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளின் ஆராதனையில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். திருமணமான புதிதில், நாங்கள் ஒரு விசேஷித்த வழக்கத்தைக் கொண்டிருந்தோம், ஆராதனைக்குப் பிறகு கதகதப்பான ஆடைகளை அணிந்துகொண்டு அருகிலுள்ள மலையில் ஏறுவோம், அங்கே  உயரமான கம்பங்களில்  350 ஒளிரும் விளக்குகள் நட்சத்திர வடிவில் கட்டி தொங்கவிடப்பிட்டிருக்கும். பெரும்பாலும் பனியிருக்கும் அங்கிருந்து நாங்கள் நகரத்தைக் கவனித்துப் பார்க்கும்போது, மெல்லிய குரலில் இயேசுவின் அற்புதப் பிறப்பைப் பற்றிய எங்கள் கருத்துக்களைப் பேசிக்கொள்வோம். இதற்கிடையில், நகரத்தில் உள்ள பலர் கீழே பள்ளத்தாக்கிலிருந்து பிரகாசமான, சரமாய் ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அந்த நட்சத்திரம் நமது இரட்சகரின் பிறப்பை நினைவூட்டுகிறது. "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவரை" தேடி எருசலேமுக்கு "கிழக்கிலிருந்து" வந்த சாஸ்திரிகளைப் பற்றி வேதாகமம் சொல்கிறது (மத்தேயு 2:1-2). அவர்கள் வானத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள், மேலும் நட்சத்திரம் உதித்ததைக் கண்டனர் (வ. 2). அவர்களின் பயணம் அவர்களை எருசலேமிலிருந்து பெத்லகேமுக்கு அழைத்துச் சென்றது, அந்த நட்சத்திரம் "பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும்" அவர்களுக்கு முன்னால் சென்றது (வ. 9). அங்கு, அவர்கள் "சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்(டனர்)டு" (வ.11).

கிறிஸ்து நம் வாழ்வில் அடையாளப்பூர்வமாகவும் (நம்மை வழிநடத்துகிறவராக) மற்றும் உண்மையாகவே வானத்தில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களைச் சிருஷ்டித்தவராகவும் என்று நமது வாழ்வின் ஒளிக்கு ஆதாரமாக இருக்கிறார் (கொலோசெயர் 1:15-16). அவருடைய நட்சத்திரத்தை (மத்தேயு 2:10) பார்த்தபோது "மகிழ்ச்சியடைந்த" சாஸ்திரிகளைப் போல, பரலோகத்திலிருந்து நம்மிடையே வசிக்க வந்த இரட்சகராக அவரை அறிந்துகொள்வதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். "அவருடைய மகிமையைக் கண்டோம்" (யோவான் 1:14).

தோழமையான இலட்சியம்

நாசியன்சஸின் கிரிகோரி மற்றும் சிசேரியாவின் பேசில் ஆகியோர் நான்காம் நூற்றாண்டில் பெரிதும் மதிக்கப்பட்ட திருச்சபை தலைவர்களாகவும், நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர். தத்துவ பாட மாணவர்களாகத்தான் முதலில் இவர்கள் சந்தித்தனர், பின்னர் கிரிகோரி, அவர்கள் "ஈருடல் ஓருயிர்" போல ஆனதாகக் கூறினார்.

அவர்களின் வாழ்க்கைப் பாதைகள் மிகவும் ஒத்ததாக இருந்ததால், கிரிகோரிக்கும்  பேசிலுக்கும் இடையே போட்டி ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளாலான வாழ்க்கையைத் தங்களின் "ஒரே லட்சியமாக" கொண்டு, மேலும் இந்த லட்சியத்தில் தன்னை காட்டிலும் மற்றவர் சிறக்க வேண்டுமென்று "ஒருவரையொருவர் ஊக்குவித்த" காரணத்தால் இந்தச் சோதனையை மேற்கொண்டதாக கிரிகோரி விளக்கினார். இதன் விளைவாக, இருவரும் நம்பிக்கையில் வளர்ந்தனர் மற்றும் போட்டியின்றி உயர் மட்ட திருச்சபை தலைமைக்கு உயர்ந்தனர்.

எபிரேயர் புத்தகம், நாம் விசுவாசத்தில் வலுவாக இருக்க உதவும் வகையில் எழுதப்பட்டுள்ளது (எபிரேயர் 2:1), நாம் "நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில்" அசைவில்லாமல் உறுதியாயிருக்கவும், "அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர்" (10:23-24) ஊக்குவிக்கவும் ஏவுகிறது. இந்த கட்டளை ஒரு சபைக்கென்று கொடுக்கப்பட்டிருந்தாலும் (வ. 25), அதை தங்கள் நட்புக்குப் பயன்படுத்தியதின் மூலம், கிரிகோரியும் பேசிலும் எவ்வாறு நண்பர்கள் ஒருவரையொருவர் வளர ஊக்குவிக்கலாம் என்றும், அவர்களுக்கு இடையே வளரக்கூடிய போட்டி மனப்பான்மை போன்ற "கசப்பான வேரை" (12:15) தவிர்க்கலாம் என்பதையும் காட்டினார்கள்.

விசுவாசம், நம்பிக்கை மற்றும் நற்கிரியைகளை நமது சொந்த நட்பின் லட்சியமாகக் கொண்டு, இந்த இலட்சியத்தில் நம்மைக் காட்டிலும் நமது நண்பர்கள் சிறக்கும்படி அவர்களை ஊக்குவித்தால் என்ன? இரண்டையும் செய்யப் பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவத் தயாராக இருக்கிறார்.

உணரக்கூடிய அன்பு

மருத்துவமனையில் படுக்கையிலிருந்த என் தோழி மார்கரெட் அருகில் அமர்ந்திருந்தபோது, ​​மற்ற நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சலசலப்பு மற்றும் செயல்பாடுகளை நான் கவனித்தேன். நோய்வாய்ப்பட்ட தன் தாயின் அருகில் அமர்ந்திருந்த ஒரு இளம் பெண், "உங்களைத் தொடர்ச்சியாக வந்து விசாரிக்கும் இவர்கள் யார்?" என்று மார்கரெட்டைக் கேட்டாள். அவள், "இவர்கள் என் சபை குடும்பத்தின் உறுப்பினர்கள்!" என்று பதிலளித்தாள். அந்த இளம் பெண், தான் இதைப் போன்ற எதையும் முன்னர் கண்டதில்லை என்று குறிப்பிட்டார்; இந்த வருகையாளர்கள் "அன்பிற்கு உருவம் கொடுத்தது போல" இருப்பதாக அவள் உணர்ந்தாள். மார்கரெட் சிரித்துக்கொண்டே பதிலளித்தார், “அது எல்லாம் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பினால் வருகிறது!”

மார்கரெட் தனது பதிலில், சீஷன் யோவானை எதிரொலித்தார். யோவான் தனது இறுதி நாட்களில் அன்பால் நிறைந்த மூன்று நிருபங்களை எழுதினார். அவர் தனது முதல் நிருபத்தில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்” (1 யோவான் 4:16) என்றார். அதாவது, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று" ஏற்றுக்கொள்பவர்கள் (வ.15) "அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை" (வ.13) அறிந்திருக்கிறார்கள். நாம் எப்படி பிறரை அன்புடன் கவனித்துக் கொள்ள முடியும்? "அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (வ.19).

தேவனின் அன்பெனும் ஈவின் காரணமாக, மார்கரெட்டைப் விசாரிப்பது எனக்கும் எங்கள் சபையில் உள்ள பிறர்க்கும் ஒரு கஷ்டமாகத் தோன்றவில்லை. மார்கரெட்டிடமிருந்து மட்டுமல்ல, அவளுடைய இரட்சகரான இயேசுவைப் பற்றிய அவளுடைய மென்மையான சாட்சியைக் கவனிப்பதன் மூலம் நான் கொடுத்ததை விட அதிகமாகப் பெற்றேன். இன்று உங்கள் மூலமாகத் தேவன்  எவ்வாறு பிறரை நேசிக்க இயலும்?